Featured

First blog post

This is the post excerpt.

Advertisements

This is your very first post. Click the Edit link to modify or delete it, or start a new post. If you like, use this post to tell readers why you started this blog and what you plan to do with it.

post

ஞாநியின் மரணம் ஜனநாயகத்துக்கு பேரிழப்புவிடுதலைச் சிறுத்தைகள் இரங்கல்

ஞாநியின் மரணம் ஜனநாயகத்துக்கு பேரிழப்பு

விடுதலைச் சிறுத்தைகள் இரங்கல்

~~~~~~~~~

நாடறிந்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். தமிழ்நாட்டில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த ஜனநாயகக் குரல் இன்று அடங்கிப்போய்விட்டது. அவரது மறைவு ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கத்தையும் அவரை இழந்து வாடும் கும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
64 வயதே நிரம்பிய திரு.ஞாநி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்தார். ஈழப்போராட்டம் உள்ளிட்ட அனைத்து விதமான ஜனநாயகப் போராட்டங்களுக்கும் அவர் ஆதரவளிக்கத் தயங்கியது இல்லை. வெடிப்புறப் பேசும் குணம் கொண்ட திரு.ஞாநி எதற்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார். மதவாதத்தை எதிர்த்துக்கொண்டு சாதிவாத்தைக் கண்டிக்காமல் ஒதுங்கிக்கொள்கிறவர்கள் நிரம்பியுள்ள தமிழ்ச் சூழலில் இரண்டையும் சமமான அறச்சீற்றத்தோடு கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தவர் அவர்.
2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அவரை களமிறக்க விரும்பினோம். அதை மகிழ்ச்சியோடு வரவேற்ற அவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். ஆனால், மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவரது ஊடகப் பணிகளை பாராட்டி 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவருக்கு அயோத்திதாசப் பண்டிதர் விருதளித்துக் கவுரவித்தது.  
நீரிழிவு நோயால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலும் அவர் தனது அரசியல் கடமைகளை ஆற்றத் தவறியதில்லை. அவர் இறுதியாக முகநூலில் பதிவு செய்த கருத்துகூட அவரது வகுப்புவாத எதிர்ப்பின் வாக்குமூலமாகவே உள்ளது.
தமிழ் இதழியலுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களுக்கும் புறக்கணிக்க முடியாத பங்களிப்புகளைச் செய்துள்ள திரு.ஞாநி அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இவண் 

தொல்.திருமாவளவன் 

நிறுவனர் – தலைவர்,

விசிக.

​பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!உழவுத்தொழிலைப் பாதுகாக்க உறுதியேற்போம்!தலைவர் தொல்.திருமா             ​பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

உழவுத்தொழிலைப் பாதுகாக்க உறுதியேற்போம்!

தொல்.திருமாவளவன் அறிக்கை

~~~~~~~~~~

தமிழினத்தின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் திருவிழா நாளில் தமிழ்மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
தமிழினம் கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் விழா மட்டுமே மதம் சார்ந்தஅடையாளங்கள் ஏதுமில்லாப் பண்டிகையாகும். உழவுத் தொழிலையும் உழவுக் கருவிகளையும் உழவர் சமூகத்தையும் போற்றுகிறச் சிறப்புடையப் பொங்கல் விழாவில், உழவருக்குத் துணையாயிருக்கும் உழவு மாடுகளுக்கும் நன்றி சொல்லும் உயரிய பண்பாட்டை கொண்ட இனம்தான் தமிழினமாகும்.
‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்று அய்யன் திருவள்ளுவன் உழவுத்தொழிலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றி மெச்சியிருப்பதை நாம் அறிவோம். ஆனால், இன்று உழவுத் தொழில் மற்றும் உழவர் சமூகத்தின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கிற போது நெஞ்சுப் பதறுகிறது.  விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலைச் செய்து மாளும் அவலம் உருவாகியுள்ளது. விளைநிலங்கள் யாவும் பாலை நிலங்களாக மாறிவருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிக்கப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. மீத்தேன், ஷேல் எரிவாயுக்களை உறிஞ்சி எடுப்பதற்கானப்  பூதக் கிணறுகளாக மாறிவருகின்றன.
விவசாயக் குடும்பங்கள் இடம் பெயர்ந்தும் புலம் பெயர்ந்து  சொந்த மண்ணைவிட்டு வெளியேறுகின்றனர். 
இவற்றுக்கெல்லாம் இயற்கை பொய்த்துப் போனது மட்டுமின்றி, மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், விவசாயக் கொள்கைகளும் தாம் காரணங்களாகும். 
இந்நிலையில், விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு, விவசாயக் குடும்பங்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராடவும்

தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் சூழ்ந்து வரும் சாதிய-மதவாத அரசின் தீங்குகளிலிருந்தும் மக்களை பாதுகாத்திடவும் பொங்கல் திருநாளில் அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதியேற்போம்.
தமிழர் திருநாள் வெறுமெனக் கூடிக் கலையும் கொண்டாட்டத் திருநாளாக இல்லாமல் மண்ணையும் மக்களையும் குறிப்பாக உழவுத்தொழிலையும்  காப்பதற்கான சூளுரை ஏற்கும்  நாளாக கொண்டாடுவோம்.
இவண்

தொல்.திருமாவளவன்,

நிறுவனர் – தலைவர்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் எச்.ராஜாவை கைது செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை…!!

வைரமுத்துவின் ஆண்டாள் கட்டுரை…!

எச்.ராஜாவின் அநாகரிகப் பேச்சு

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் எச்.ராஜாவை கைது செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை…!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள்காட்டியிருந்தார். ஆனால் அந்த கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை. அந்த கட்டுரையை சாக்காக வைத்துக்கொண்டு ஆண்டாளை அவதூறு செய்துவிட்டார் என கவிஞர் வைரமுத்துவின் மீது எச்.ராஜா பழிபோட்டுப் அநாகரிகமாக பேசிவருகிறார். எச்.ராஜாவின் பேச்சு சாதி – மதவெறியை கொண்டதாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசிப் பதற்றத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரி இயக்கங்களை அவதூறு செய்தார். நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்தார். தற்போது கவிஞர் வைரமுத்துவும், அவரது கட்டுரையை வெளியிட்ட நாளேடும் வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு செய்துள்ளார்.
என்னையும் எமது கட்சியையும் இதே போல அவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததையும் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதையும் நாடறியும்.
எச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியபோது மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இடதுசாரிகளை இழிவு செய்தபோது ஏனையோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகளை வம்புக்கு இழுத்தபோது ஓரிருவரைத்தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் மவுனம் காத்தனர். அரசும் வேடிக்கை பார்த்தது. அதனால் தான் மேலும் மேலும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவர் பேசிவருகிறார்.
எச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இத்தகைய வெறுப்புப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும் எனவே தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
இவண்

தொல்.திருமாவளவன்

நிறுவனர் – தலைவர்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

​எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி நீண்டகால சிறைவாசிகள் அனைவருக்கும் கருணைக் காட்டுங்கள்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 

நீண்டகால சிறைவாசிகள் அனைவருக்கும் கருணைக்  காட்டுங்கள்!

 

தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்!

~~~~~~~

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டையொட்டித்  தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு மேல் சிறைகளில் உள்ள தண்டனைக்  கைதிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தமிழக முதலமைச்சர் கூறியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். 
அத்துடன், குறிப்பிட்ட சில வழக்குகளைச் சார்ந்த தண்டனைக் கைதிகளை மட்டுமின்றி, நீண்டகாலமாகச் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய கருணைகாட்டுமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். 
இந்திய அளவில் உள்ள சிறைவாசிகளின் விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது முஸ்லிம்களும் தலித்துகளும் தான் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.  2015ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள தண்டனை சிறைவாசிகளில் 17 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் என்பது தெரியவந்துள்ளது. 
தமிழ்நாட்டில் நீண்டநாட்களாக சிறையில் இருப்பவர்களை புத்தாண்டிலும், தலைவர்களின் பிறந்த நாட்களின்போதும் நன்னடத்தையின் அடிப்படையில் தணடனைக் குறைப்பு செய்து விடுவித்து வந்தனர். கடந்த 2006,2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின்போது அவ்வாறு   ஆயுள்தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.
2006 ஆம் ஆண்டு அரசாணை எண் G.O.Ms.No.873, Home Department, dated 14.09.2006 அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறையிலிருந்த 472 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2007 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் G.O .Ms.No.1326, Home Department, dated 12.9.2007  அடிப்படையில் 5 பெண் கைதிகள் உட்பட 190 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் G.O.Ms.No.1155, Home Department, dated 11.09.2008  அடிப்படையில் 1406 ஆயுள் சிறைவாசிகள் விடுதலைசெய்யப்பட்டனர்.
2011 இல் ஆட்சி மாற்றம் நடைபெற்று அதிமுக அரசு பதவியேற்றபின் தண்டனைக் குறைப்பு செய்து ஆயுள் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை. தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசு கைதிகளை விடுவிக்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். ஒரு அரசின் பெருமை சட்டத்தைப் பயன்படுத்தி தண்டிப்பதில் மட்டும் இல்லை, அது கருணையை வெளிப்படுத்துவதிலும் அடங்கியுள்ளது. 
எனவே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இதர வழக்கில் உள்ள இஸ்லாமியர்களையும் இத்தருணத்தில் விடுதலைச் செய்ய பரிவுக்காட்டுமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இது எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. 
இவண் 

தொல்.திருமாவளவன். 

நிறுவனர் – தலைவர், 

விசிக.

​ஆன்மீகவாதம் வேறு மதவாதம் வேறு நடிகர் ரஜினி தெளிவுப்படுத்துவதை

ஆன்மீகவாதம் வேறு மதவாதம் வேறு

நடிகர் ரஜினி தெளிவுப்படுத்துவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது!
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய தொண்டர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய வகையில், தான் அரசியலுக்கு வரப்போவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போவதாகவும், அதுவரை தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
அத்துடன், தன்னுடைய அரசியல் என்பது ‘சாதி மதசார்பற்ற ஆன்மீக அரசியலாக’ இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். இதிலிருந்து அவர் பொதுமக்களுக்கு உணர்த்த விரும்புவது என்னவென்றால், சாதியவாதிகளோடு-மதவாதிகளோடு கைகோர்க்கப் போவதில்லை என்பதையும், அதே வேளையில் மதவாதத்தை எதிர்க்கும் இடதுசாரி, முற்போக்கு சிந்தனையாளர்களோடும் சேரப்போவதில்லை என்றும் தெளிவுப்படுத்த முயற்சிக்கிறார்

என்பதே ஆகும். 
அதாவது,ஆன்மீகவாதம் வேறு மதவாதம் வேறு என்பதை வேறுபடுத்திக்காட்ட அவர் முயற்சிக்கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக, பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் மதவாத அரசியலுக்கு துணைப் போகமாட்டேன் என்பதை அவர் உணர்த்துவதாகத் தெரியவருகிறது. அதே வேளையில், கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்து மதங்களை சார்ந்தவர்களையும் அணிதிரட்ட விரும்புகிறார் என்றும் தெரிகிறது. அவருடைய ‘ஆன்மீக அரசியல்’ மதவாதத்திலிருந்து வேறுபட்டது, விலகி நிற்கக்கூடியது என்பதை எதிர்காலத்தில் அவருடைய செயல்பாடுகள் தான் உறுதிப்படுத்த வேண்டும்.
 ‘சாதி மத சார்பற்ற’ என்னும் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவருக்கு பின்னால் சாதியவாதிகளோ மதவாதிகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார் என்கிற வகையில் அவரது நிலைப்பாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கவும் வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்

நிறுவனர் – தலைவர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

வெண்மணி கொடூரம்**காலத்தால் ஆறாத குரூரம்!**- தொல்.திருமாவளவன்*

*வெண்மணி கொடூரம்*

*காலத்தால் ஆறாத குரூரம்!*

*- தொல்.திருமாவளவன்*

~~~~~

இன்று உலகமே இயேசு பெருமானின் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் நாம் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறோம். 
இதே நாளில் தான், 1968 ஆம் ஆண்டு, தஞ்சை- கீழ்வெண்மணியில் அந்தக் கொடூரம் அரங்கேற்றப் பட்டது. சாதிக் கொழுப்பும் பணத் திமிரும் மேலோங்கிய பண்ணையார்கள் என்னும் ஆதிக்க வெறிபிடித்த கும்பல், விவசாயக் கூலித் தொழிலாளர்களான ஏழை-எளிய சேரிவாழ் மக்கள் 44 பேரை உயிரோடு எரித்துக் கருக்கி, சாம்பலாக்கி எக்காளமிட்டது.
கூலி நெல்லை  இன்னும் ஒருபடி கூடுதலாகக் கொடுக்க வேண்டுமெனக் கோரியது தான் குற்றமாம். பொதுவுடமை கட்சியினரின் துணையோடு, சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும், மிகக் குறைந்த கூலியில் மிக மோசமான முறையில் காலங்காலமாக உழைப்பைப் சுரண்டும்  ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், உழைக்கும் மக்கள் அமைப்பாய் அணி திரண்டது தான் அவர்கள் செய்த பாவமாம். 
இதனால் ஆத்திரமடைந்த சாதிவெறி பண்ணையார்கள், ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கி வெறியாட்டம் போட்டனர். ஒருநாள், ‘விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச்’  சார்ந்த இருவரைப் பிடித்துக் கட்டிவைத்து அடித்து வதை செய்தனர். அதனைக் கேள்வி பட்டதும் அக்கிராமத்திற்குச் சென்று வதைக்குள்ளான அவர்களை விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மீட்டுவந்தனர். 
இந்த துணிச்சல் வாய்ந்த நடவடிக்கை பண்ணையார்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது; எனினும், அவர்களின் ஆணவத்தை மேலும் பன்மடங்காகப் பெருக்கி விட்டது. தமது ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் தக்கவைத்திட வேண்டுமென்பதுடன், அவற்றை வலுவாக நிலைநாட்ட வேண்டுமென்பதற்காகவே சாதிவெறிப் பிடித்த  பண்ணையார்கள் இந்தக் கொடூரமான ‘பெருந்திரள் படுகொலையை’ நடத்தினர். 
பண்ணையார்களிடையே மேலோங்கிய அச்சத்திற்கும் ஆத்திரத்திற்கும் உழைக்கும் மக்களிடையே பரவிய கம்யூனிஸமும் ஒரு காரணமாக அமைந்தது எனலாம். 
காலம் காலமாக அடிமைப்பட்டு சிதறி கிடந்தவர்களை, கம்யூனிஸ இயக்கம் அரசியல் ரீதியாக அணிதிரட்டி அமைப்பாக்குவதாலும், ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் துணிவை ஊக்கப்படுத்துவதாலும் அவ்வியக்கத்தை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்கிற பண்ணை ஆதிக்க வெறியும் , 
கைகட்டி,வாய்பொத்தி, கூனிக் குறுகிக் கிடந்த கீழ்ச்சாதி அடிமைகளுக்கு நம்மை எதிர்க்குமளவுக்குத் துணிச்சலா? என்கிற சாதி ஆதிக்க வெறியும் தான், உழைக்கும்

மக்களை- குறிப்பாக தலித் மக்களை மட்டுமே 

ஈவிரக்கமின்றி உயிரோடு எரித்து ஓலமிட்டது. 
கையளவும் நிலமில்லாத கூலிகள், பெருநிலவுடைமையாளர்களான நம்மையே எதிர்ப்பதா என்கிற பண்ணை ஆதிக்கவெறியும், தீண்டப்படாத கீழ்ச்சாதிப் பிறவிகள், மேல்சாதியினரான நம் முன்னால் தலைநிமிர்வதா என்கிற சாதி ஆதிக்கவெறியும் தான் அந்தக் கொடூரப் படுகொலையை நிகழ்த்தியது. 
வழக்கம்போல இந்தக் கேவலத்தை அரசமைப்பின் அனைத்துத் துறையினரும் ஆட்சியாளர்களும் வேடிக்கைப் பார்த்தனர் என்பதுடன், அந்த சமூகவிரோதக் கும்பலைப் பாதுகாப்பதில் தீவிரமாயிருந்தனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை! 
கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகள் யாவருமே நிரபராதிகள் என உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இது தலித்துகளுக்கு எதிரான மாபெரும் அரசவன்கொடுமை! 
வழக்கம் போல அரசியல்கட்சிகள் வாய்மூடி, விழிமூடி, விலகிநின்று வேடிக்கை பார்த்தன!ஒருசில கட்சிகள் அந்தக் கொடுமையை ஞாயப்படுத்தின! இது ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான அரசியல் வெங்கொடுமை! 
எனினும், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நக்சல்பாரிகள் என்னும் மக்கள் படை கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு மரணத் தண்டனை விதித்து நிறைவேற்றியது. 
வெண்மணி கொடூரம் காலத்தால் ஆறாத குரூரம்! 
சாதிய- நிலவுடைமை ஆதிக்கத்தை வேரறுக்கும் போரில் களப்பலியான வெண்மணி போராளிகளுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்! 
ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்து, தொடர்ந்து போரிட இந்த நாளில் உறுதியேற்போம்!
இவண்

தொல்.திருமாவளவன்.